யாழில் வெள்ள அனர்த்தம் : அரசாங்க அதிபரின் முக்கிய அறிவித்தல்
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போதான உணவு விநியோகம் தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளார்.
அந்த அறிவிப்பில், யாழ்ப்பான மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கான சமைத்த உணவு கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மட்டுமே வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எவரும் சமைத்த உணவினை பாதுகாப்பு நிலையங்களில் தங்கி உள்ளவர்களுக்கு வழங்க முடியாது.
பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக வேறு எவரும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு சமைத்த உணவு வழங்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் இதனால் தேவையற்ற சமைத்த உணவு விரயங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.
அரச அதிபரின் அறிவிப்பு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நண்பர்கள், உறவினர் வீடுகள் மற்றும் தங்களுடைய வீடுகளில் இருப்பவர்கள் தங்களுக்குரிய சமைத்த உணவு தேவையினை கிராம அலுவலரிடம் தெரிவிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது உலர்உணவு நிவாரணத்தை இனிவரும் காலங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

உணவு அல்லாத பொருட்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக மட்ட நிறுவனங்கள் மாவட்டச் செயலகத்திற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் பிரதேச செயலாளர்களின் கோரிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் பங்கீடு செய்யப்பட்டு வழங்க முடியும்.
சிறிய அளவில் அல்லது குறைந்த எண்ணிக்கையில் உணவு அல்லாத பொருட்களை தாங்கள் நேரடியாக பாதுகாப்பு நிலையங்களில் உள்ளவர்களுக்கும் ஏனைய பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கலாம். பாதுகாப்பு நிலையங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவல்லாத பொருட்களின் பதிவுகள் கிராம அலுவலரால் மேற்கொள்ளப்படும்.
உணவுப்பொருட்கள் வீண் விரயம்
பாதுகாப்பு நிலையங்களுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவல்லாத பொருட்களின் விபரங்களை சம்பந்தப்பட்டவர்கள் கிராம அலுவலர் /பிரதேச செயலருக்கு தெரிவிப்பதன் மூலம் பிரதேச செயலக ரீதியாக, பேணப்படும் பொருட்பதிவிற்குள் உட்படுத்தப்படும்.
இத்தகைய விபரங்களை கிராம அலுவலரிடம் அல்லது பிரதேச செயலாளர்களிடம் பதிவுக்குட்படுத்தாத போது பிரதேச மட்ட பதிவுக்குள் உட்படுத்தப்பட முடியாத நிலைமை ஏற்படும்.

இந்த நடைமுறைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பின்பற்றுவதன் மூலம் உணவுப்பொருட்களின் வீண் விரயங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.
அத்துடன் பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் பொருட்களை தேவை அடிப்படையில் பங்கீடு செய்யப்படுவதோடு வழங்கப்பட்ட பொருட்களுக்கான பதிவுகள் உரிய முறையில் பேணப்படும் என்பதனை அறியத் தருவதோடு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகம்
மேலும், யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (02.12.2025) 3729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாகவும், நாளை தினம் 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம் 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |