தொடர்ந்து அத்துமீறும் இந்திய மீனவர்கள்- எதிர்ப்பு நடவடிக்கையில் இலங்கை மீனவர் சங்கங்கள்!
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
கடந்த 5ம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகில் இருந்த குருநகர் மீனவர்களை தாக்க முயன்ற நிலையில், இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டே மீனவர் சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தின் போது, எமது கடல் வளங்களை அழிக்காதே, இலங்கை அரசே இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து, எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வெளிநாட்டு மீனவர்களை அனுமதிக்காதே, இலங்கை அரசே உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்து, கடல் வளத்தை சுரண்டி எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே போன்ற பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்திற்கு பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் மகஜர் ஒன்று கொடுக்கப்பட்டது. அதேவேளை கடற்றொழில் அமைச்சருக்கும், யாழ் மாவட்ட செயலகத்திற்கும், யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.