யாழ். நல்லூர் மந்திரிமனை விவகாரம் : அமைச்சர் அளித்த உறுதி மொழி
யாழ்ப்பாணம் - நல்லூர் மந்திரிமனை புனரமைப்பு உள்ளிட்ட தொல்பொருள் திணைக்களம் சார்ந்து காணப்படும் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் உருவாக்கப்படும் தொடர் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் நேரடியாக அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது.
தொல்பொருள் திணைக்களம் சார்ந்த பிரச்சினைகள்
இந்தநிலையில், வவுனியா - வெடுக்குநாறிமலை விவகாரம், யாழ்ப்பாணம் - நல்லூர் மந்திரிமனை புனரமைப்பு, திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் தலையீடு மற்றும் மட்டக்களப்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட தொல்பொருள் திணைக்களம் சார்ந்து காணப்படும் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்ப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அமைச்சர் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சாணக்கியன், ப.சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், துரைராசா ரவிகரன், ஶ்ரீநாத் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |