யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற அமர்வின் போது நடைபெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ். மாவட்டத்தை சுற்றுலா பிரதேசத்தின் முக்கியமான மைய பிரதேசமாக மாற்றுவதாக இருந்தால் அதற்கான போக்குவரத்து ஸ்தானங்களை உறுதிப்படுத்த வேண்டும். இதில் முதலாவது பலாலி விமான நிலையம் முக்கியமானது.
இந்தியாவின் நிதியுதவி
இந்தியா இதனை அபிவிருத்தி செய்ய தயாராக இருந்தாலும் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அந்த உதவியை பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர். மூன்று கட்டமாக அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இணங்கியிருந்தது.

அதில் ஓடுபாதை அபிவிருத்தியை செய்ய வேண்டும். பிராந்திய விமானங்கள் வந்து இறங்கக்கூடியவாறு இருக்க வேண்டும். அப்படியென்றால் சிங்கப்பூர், டுபாய் போன்ற இடங்களில் இருந்து விமானங்களை இறக்கக்கூடியதாக இருக்கும்.
இந்தியா இலவசமாக அதற்கான உதவியை வழங்க முன்வந்த போதும் அதனை அனுபவிக்காமல் இருப்பது துரதிஸ்டவசமானது. இதன்படி அதனை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இராணுவ பிரசன்னம்
இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் அவர்கள் வர தயாராக இருக்கின்றனர்.

இதற்காக முதலாவதாக அங்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும். இராணுவ எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
அவ்வாறு கணிசமான மாற்றம் ஏற்பட்டால் எமது மண்ணை சார்ந்த மக்களே யாழ்ப்பாணத்திற்கு வந்து முதலீடுகளை செய்து பொருளாதார இருப்புகளை முன்னேற்றலாம்“ என தெரிவித்தார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |