யாழில் அச்சுறுத்தப்பட்ட பெண் ஊடகவியலாளர்: வெளியான கண்டன அறிக்கை
யாழில் (In Jaffna) பெண் ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்ட குழுவினர் ஒன்றினால் அச்சுறுத்தப்பட்டமைக்கு யாழ். ஊடக மன்றமானது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
சுயாதீன ஊடகவியலாளரான சுமித்தி தங்கராசா என்பவர் நேற்று (22) செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை கிளிநொச்சியிலிருந்து வந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் ஊடக மன்றம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டம்
இது தொடர்பில் ஊடக மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “குறித்த ஊடகவியலாளர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, அந்த போராட்டத்தில் குழப்பம் செய்வதற்கு வந்த குழுவினரால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நடுநிலையான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது.
அச்சுறுத்திய நபர்
அவ்வாறான செய்திகளை சேகரிக்கும் போதும், அதனை அறிக்கையிடும் போதும் அந்த ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பல.
மக்களது பிரச்சினைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுவது குறித்து எவரும் கரிசினை கொள்வதில்லை.
சம்பவத்தின்போது குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் அந்த இடத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கள் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகின்றது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை கருதப்படுகின்ற இவ்வாறான சூழ்நிலையில் அச்சுறுத்திய நபர், ஊடகங்களாலேயே நாடு நாசமாக போவதாகவும் மற்றும் நீங்கள் ஊடகவியலாளர்கள் அல்ல நாட்டை கெடுப்பவர்கள் என கூறியுள்ளமை ஊடகத்துறையை அவமதிக்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.
பொது அமைப்பு
இந்த கருத்துக்கு பொது அமைப்புகளோ மற்றும் அரசியல்வாதிகளோ இதுவரை தமது கண்டனத்தை வெளியிடாமை என்பது கவலைக்குரிய விடயம்.
ஊடகங்களும் மற்றும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கோ, குரல் கொடுப்பதற்கோ முன்னிற்பவர்கள் அல்லது முன்னிற்கும் அமைப்புகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிற்கே காணப்படுகின்றது.
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடம் ஏறியிருக்கின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் ஊடகங்களுக்கும் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல் அல்லது பாதிப்புகள் குறித்து காத்திரமான நடவடிக்கையை எடுப்பதற்கு முன்வரவேண்டும் என்பதனை யாழ். ஊடக மன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

