மந்திரிமனையின் புனரமைப்பிற்கு தடையாக இருந்த நபர் : வெளியான பின்னணி
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனையை புனர்நிர்மாணம் செய்வதற்கு குறித்த காணியின் உரிமையாளரே தடையாக இருந்தார் என முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் முப்பரிமாணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனை அழிப்பதும் மட்டும் வன்முறையல்ல அழியவிடுவதும் வன்முறை தான். தமிழர் தாயக பிரதேசங்களில் இதுதான் அதிகமாக நடைபெறுகின்றது.
அழிந்து போகட்டும் என நினைத்து விட்டுவிடுகின்றார்கள். எங்களுடைய அரசியல் தலைவர்களிலும் சில குறைபாடுகள் இருக்கின்றன. அந்த அடிப்படையில் தான் இவர்கள் இதை பேசுவார்கள், எங்களிலே பழி போடுவார்கள் ஆனால் பொறுப்பெடுத்துச் செய்ய மாட்டார்கள் என சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்களும் இதனைக் கடைப்பிடிக்கின்றன.
இந்தநிலையில் தான் மந்திரிமனையின் ஒரு பகுதி உடைந்து விழுந்திருக்கின்றது. உண்மையில் இது ஒரு துன்பியல் செய்தி. அங்கு வருகின்ற ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகள் உடைந்த ஒரு மனநிலையில் தான் இருக்கின்றார்கள்.
யாழ்ப்பாண மரபுரிமை மையம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே மந்திரிமனையை புனர்நிர்மாணம் செய்வதேயாகும். ஆனால் மந்திரிமனையின் நில உரிமையாளர் அதற்கு மிகவும் தடையாக இருந்தார்.
உண்மையில் சிங்கள பௌத்த அரசாங்கம் தடையாக இருக்கலாம் அல்லது தொல்பொருள் திணைக்களம் தடையாக இருக்கலாம். ஆனால் இந்த நில உரிமையாளர் பல தடைகளை விதிப்பது என்பது தமிழினமே தாழ்வு நிலைக்கு செல்லுகின்ற விடயம்.
யாழ்ப்பாண மரபுரிமை மையம் அதனைப் பொறுப்பெடுத்து தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்தியம்புகின்ற ஒரு நூதனசாலையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கீடு செய்திருந்த போதும் நில உரமையாளரின் காரணமில்லாத காரணத்தினால் அதனை விட்டுவிட்டது.
நில உரிமையாளருக்கு அடுத்த படியாக தொல்பொருள் திணைக்களத்திலும் தவறு இருக்கின்றது. மந்திரிமனைக்கு பதிலாக அங்கு ஒரு பௌத்த சின்னம் இருந்திருந்தால் அதனுடைய நிலைமை வேறு.
இது தான் மக்களிடையே இனமுரண்பாடுகளை உருவாக்குகின்றது. தமிழர்களுக்கு ஒரு முகத்தையும் சிங்கள சின்னங்களுக்கு ஒரு முகத்தையும் காட்டிக்கொண்டு அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
