சாவகச்சேரி பிரதேச சபையின் கவனயீனத்தால் சூறையாடப்படும் அரச சொத்து- மக்கள் குற்றச்சாட்டு!
மறவன்புலவு மக்கள் 2009 ஆம் ஆண்டு மீளக் குடியமர்ந்த பிற்பாடு மறவன்புலோ கிராம அபிவிருத்திக்கு என வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் ஊடாக மணற்காடு வீதி புனரமைக்கப்பட்டது. இந்த வீதி புனரமைப்பு தேவைக்காக பெருமளவான கருங்கல் சல்லிகள் மறவன்புலோ மணற்காடு வீதியின் இருமருங்கிலும் சேமிக்கப்பட்டு செப்பனிடும் பணி இடம்பெற்று வந்த நிலையில், 2009ஆம் ஆண்டு அன்றைய காலகட்டத்தில் வீதி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்தகாரர் இடைநடுவில் அந்தப் பணியினை கைவிட்டு மட்டக்களப்பு திரும்பினர்.
இதன் பின்னராக இன்று வரையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த கருங்கல் சல்லிகள் வீதியோரத்தில் ஆங்காங்கே காணப்படுகின்றன. அந்த சல்லி கல்லினை தற்போது அப்பகுதியில் வசிக்கும் ஒரு சில சமூக விரோதிகள் விற்பனை செய்யும் நடவடிக்கையிலும் தமது வீட்டு மதில் போன்றவற்றை கட்டும் பணிக்கும் பயன்படுத்துகின்றனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மறவன்புலோ பகுதியில் பல வீதிகள் சேதமடைந்து காணப்படும் நிலையிலும் இன்னும் பல வீதிகள் புனரமைக்கப்படாது பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் இந்த சல்லியினை பயன்படுத்தி சாவகச்சேரி பிரதேச சபை அப்பகுதி மக்களுக்கு வீதிகளை அமைத்து கொடுக்க முடியுமானபோதும் அதனை பயன்படுத்தாது கள்வர்கள் திருடிச் செல்லும் வகையில் பாராமுகமாக இருப்பது வேதனை அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
ஆகவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தொகையான சல்லி கல்லினை பொறுப்பேற்று அப்பகுதி மக்களின் வீதிகளைத் திருத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.