யாழ்.மாநகர சபையில் இன்று இரண்டாவது வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு..!
யாழ் மாநகர சபையின் முதல்வர் இ. ஆனோல்ட்டின் தலைமையிலான 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று விவாதத்திற்கு வரவுள்ளது.
ஏற்கனவே முதல் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாவது தடவையாக வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பு முன்வைக்கப்படவுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு யாழ் மாநகர சபையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் இன்றைய வாக்கெடுப்பு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிவண்ணன்
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது யாழ். மாநகர சபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கவில்லை.தொங்கு சபையே அமைந்தது. அதில் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன இணைந்து ஆட்சியைப் தக்கவைத்துக்கொண்டது.
அப்போது முதல்வராகப் பதவியேற்ற ஆனோல்ட்டின் நிர்வாகத்தின் மீது சொந்தக் கட்சியினரே குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நிலையே இருந்ததால் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
இரண்டு தடவை அவரது வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதனால் அவர் பதவி விலகினார். அதன் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்தவரான மணிவண்ணன் தனது கட்சியில் இருந்து பிரிந்து நின்று தனியாக முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார்.
வரவு செலவுத் திட்டம்
ஈபிடிபி போன்ற மற்றைய கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றிபெற்றார். எனினும் அவரது ஆட்சியின் மீதும் குற்றச்சாட்டுக்களை சாட்டி அவரது வரவு செலவுத் திட்டமும் தோற்கடிக்கப்பட்டது.
தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை இரண்டாவது வாக்கெடுப்புக்கு விடாமலேயே அவர் பதவி விலகினார். அதனால் மீண்டும் பதவிக்கு வந்தார் ஆனோல்ட். ஆனால் அவரது வரவு செலவுத் திட்டத்தையும் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து தோற்கடித்தன.
இதன் காரணமாக இன்று அதன் இரண்டாவது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. எதிர்க் கட்சிகளின் ஆதரவு இன்றி இதிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே கூறப்படுகிறது.
யாழ். மாநகர சபை
இந்நிலையில் இன்று யாழ். மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் சபை தானாகவே கலைந்ததாக கருதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. இவ்வாறு வாக்கெடுப்பு நடக்காவிட்டாலும் இன்னும் 19 நாட்களில் உள்ளூராட்சி சபையின் ஆயுட்காலம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.
இந்த நிலையில் இன்றைய வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் இரு அணிகளுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ரெலோ,புளொட் இணைந்து எதிர்த்தே வாக்களிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால் இரண்டாவது வரவு செலவுத்திட்டமும் தோல்வி அடையவே வாய்ப்புக்கள் அதிகம் என கூறப்படுகிறது.
