யாழ்.சித்தன்கேணிப் பகுதியில் இடம்பெற்ற கொடூர கொலை!
யாழ்ப்பாணம் சித்தன்கேணிப் பகுதியில் நபர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தன்கேணி கலைவாணி வீதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவருடன் வேறு நபர்களுக்கு ஏற்பட்ட காணிப்பிரச்சினை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர்கள் இருவர் இணைந்தே குறித்த குடும்பஸ்தரை கம்பியால் தாக்கி கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் புள்ளி என்று அழைக்கப்படும் 45 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் உள்ளவரின் வயல் காணியை சகோதரர்கள் இருவர் பராமரித்து வருகின்றனர். இன்றைய தினம் அந்தக் காணியில் மற்றொருவர் இருப்பதாக அறிந்த சகோதரர்கள் இருவரும் அங்கு சென்று அவருடன் முரண்பட்டதுடன் கம்பியால் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே சரிந்து உயிரிழந்துள்ளார்” என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.