கொடியேற்றம் காண்கிறான் நல்லூர் கந்தன் (நேரலை)
யாழ்ப்பாணத்தின் (jaffna) வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருந்திருவிழா இன்று (09) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 26ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு கார்த்திகை திருவிழாவும், மறுநாள் 27ஆம் திகதி காலை 6.45 மணிக்கு சூர்யோற்சவமும் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து 23ஆம் திருவிழாவான எதிர்வரும் 31ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு சப்பரத் திருவிழாவும், செப்டெம்பர் முதலாம் திகதி காலை 6.15 மணிக்கு தேர்த்திருவிழாவும், அடுத்தநாள் செப்டெம்பர் 2ஆம் திகதி காலை 6. 15 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
வீதிகளில் போக்குவரத்து தடை
இதேவேளை, நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் குறித்த போக்குவரத்து தடையானது எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.
அதன்படி, வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை (Point Pedro) வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும்.
குறிப்பாக, இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |