யாழில் வாள்வெட்டு சம்பவமொன்றில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்முறை கும்பல்
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மருதனார்மடம் பகுதியில் வைத்து நேற்று (03-04-2026) காவல்துறையினர் குறித்த நபரைக்கைக்குண்டுடன் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அவரைச் சுன்னாகம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளில், கடந்த 26-ஆம் திகதி பண்ணைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு அவருக்குப் படுகாயமேற்படுத்தியதுடன் மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலில் ஒருவராகக் குறித்த நபரும் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றின் முக்கிய உறுப்பினராகச் செயற்படும் குறித்த நபருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது மருதனார்மடம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரைச் சுன்னாகம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்