யாழ். பட்ட திருவிழாவில் பல உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு!
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்ட திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளை பேணத் தவறிய 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட திருவிழாவின் போது, வைத்திய சான்றிதழ் இன்றி உணவினை கையாண்டமை, பிளாஸ்டிக் ரக கொள்கலன்களை பயன்படுத்தியமை, தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவினை கையாண்டமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த வழக்கு தாக்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
உணவு நிலையங்கள்
அதன்படி, ஐஸ்கிறீம் வாகனங்கள், பஞ்சு மிட்டாய் உற்பத்தி,காரம் சுண்டல் வண்டில்கள், பானிப்பூரி விற்பனை நிலையங்கள் உட்பட 24 உணவு நிலையங்களிற்கு எதிராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (23.01.2026) வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு இன்று (23.01.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 24 உரிமையாளர்களில் 19 பேர் நீதிமன்றில் முன்னிலையாகி தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.
அதனையடுத்து 19 உரிமையாளர்களையும் கடுமையாக எச்சரித்த நீதிமன்ற அவர்களுக்கு 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
இதேவேளை நீதிமன்றில் இன்று (23.01.2026) முன்னிலையாக ஏனைய 05 உரிமையாளர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |