யாழ் போதனா வைத்தியசாலையின் 175 ஆம் ஆண்டு நிறைவு : வெளியிடப்பட்ட முத்திரை
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தபால் முத்திரை வெளியிப்பட்டதுடன் உப தபால் அலுவலக திறப்பு விழாவும் நடைபெற்றது.
நேற்று (18) யாழ் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அக்கால அரசாங்க அதிபரால், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது.
விரிவுபடுத்தப்பட்ட சேவைகள்
பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு "யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை" என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன.
அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது "யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை" என மாற்றப்பட்டது. 1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை "யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை" (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது.
இந்நிலையில், எதிர்காலத்தில் "தேசிய வைத்தியசாலை" (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசேட தபால் முத்திரை
175 ஆண்டு சேவையை நினைவுகூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் இவ்வைத்தியசாலையில் நடைபெற உள்ளன. அதன் முதற்கட்டமாக, விசேட தபால் முத்திரை (Commemorative Stamp) ஒன்று இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
அஞ்சல் திணைக்களத்தின் உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம், வட மாகாண உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம் மற்றும் அஞ்சல் துணைக் கிளை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசேட தபால் முத்திரையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலதிக செய்திகள் - த.பிரதீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





