யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்து, சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ATICU) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்பந்தமான விளக்க ஊடக அறிக்கை ஒன்றினை வைத்தியசாலையின் தாதியர் சங்கம் வெளியிட்டுள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் அங்கு கடமை புரியும் வைத்தியர் ஒருவருக்கும் பொறுப்புத் தாதிக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாட்டின் பின்னணியில் இந்த அசாதாரண சூழ்நிலை தோன்றியுள்ளதாக அதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பொறுப்பு தாதி 20 வருடங்களுக்கு மேலான சேவை அனுபவத்தினை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நிறைவு செய்த ஒரு அர்ப்பணிப்பான சேவையாளர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமான தீர்வு
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் முறையான விசாரணைக்கு இவ்விடயம் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தாதியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, விசாரணை முடிவடையும் பட்சத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், மேற்படி விடயம் சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதனையும் இவை தமது கண்ணியமான சேவைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 நாட்கள் முன்
