தையிட்டி விகாரையை அகற்ற முடியும் : தென்னிலங்கைக்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதியா.....
யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என மக்கள் போராட்ட முன்னணியின் (People's Struggle Alliance) உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (12) முன்னெடுக்கப்படுகின்ற போராட்டக்களத்தில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த விகாரையின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது ஆகவே இந்த விகாரையை அகற்ற முடியாது என பலரும் பல்வேறு கருத்துக்ளை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் தென்னிலங்கையில் இருந்த பல சட்டவிரோதமான விகாரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய வழக்கின் மூலம் வீதி அபிவிருத்திக்காக அகற்றப்பட்டிருக்கின்றது.
எனவே அவர்களுக்கு ஒரு நீதி இங்கிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி என்றால், சிங்களப் பேரினவாதத்தினுடைய ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழருக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நிலைமையும், தமிழ் மக்கள் எந்தவொரு இடத்திலும் தங்களின் பூரண இனச்சுதந்திரத்துடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலையியை ஏற்படுத்துகின்ற சிந்தனையை இது வெளிப்படுத்துகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் மாவட்டத்திற்கு மாவட்டம் என்ற அடிப்படையில் தான் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது. பல்கலைக்கழக அனுமதி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் வரை அந்த அடிப்படையிலேயே வரையறை செய்யப்படுகின்றது.
மாவட்டத்தினுடைய இனப்பரம்பலை சிதைக்கும் பொழுது எங்களுடைய உரிமைகளை நாங்கள் முற்றாக இழக்கின்றோம். இந்தப் பிரதேசத்தில் காணிகளைத் தொலைத்து நிற்பவர்களை உரிமையற்றவர்களாகவே பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)