யாழில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை! ஓராண்டை கடந்தும் தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டமானது, ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விகாரையானது தமிழ் மக்களது காணிகளை அபகரித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி பௌர்ணமி தினமான இன்று (23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத விகாரை
இதனையடுத்து, இன்றைய தினம் தென் பகுதியில் இருந்து மக்கள் குறித்த விகாரைக்கு வழிபாடுகளை மேற்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.
இதன்போது, பல நூற்றுக்கணக்கான மக்கள் அணி திரண்டு அனுமதியின்றி மக்களது காணியில் கட்டப்பட்ட சட்ட விரோத விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "தையிட்டி எங்கள் சொத்து, வடக்கு கிழக்கும் தமிழர் தாயகம், மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, பலாலி காவல்துறை பொறுப்பு அதிகாரி ஒரு கொலைகாரன், பௌத்தத்தின் பெயரால் காணிகளை அபகரிக்காதே, இந்த மண் எங்களின் சொந்த மண், சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா, பௌத்தத்தின் போதனை சட்டவிரோத ஆக்கிரமிப்பா" என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
இந்த போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ( S. Kajendran), தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்((Kanakaratnam Sukash), காணியின் உரிமையாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |