யாழ். சுற்றுலா விருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பு! வழங்கப்பட்ட உறுதிமொழி
2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடனான சந்திப்பின்போது உறுதியளிக்கப்பட்டது. வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (04.11.2025) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
உரிமம் மாற்றம்
யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது பெருமளவுக்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் கவனமெடுத்து விசேடமாக ஆளணியை நியமித்து விரைவாக நிறைவுசெய்வதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு யாழ். மாநகர சபையின் மேயர் மற்றும் ஆணையாளரை ஆளுநர் கோரினார்.
உரிமம் மாற்றத்தை செய்வதன் ஊடாக மாநகர சபைக்கான வருமானம் பல கோடி ரூபாக்கள் வரையில் கிடைக்கப்பெறும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள வாகனத் தரிப்பிடம் தொடர்பிலும் வர்த்தக சங்கப் பிரதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அவர்களால் அடையாளப்படுத்தப்படும் இடத்தின் பொருத்தப்பாட்டை நேரில் சென்று ஆராய்ந்து நிறைவேற்றிக் கொடுக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

