கோர விபத்து : இந்திய துணைத் தூதரக அதிகாரி பலி.... யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம்
புதிய இணைப்பு
வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று (26) அதிகாலை டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் (Consulate General of India) பணியாற்றும் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
52 வயதான சச்சிதானந்த பிரபாகர குருக்கள் என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கண்டியிலிருந்து (Kandy) யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (26) அதிகாலை 4.30 மணியளவில் ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காரில் பயணம் செய்துள்ள நிலையில் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 52 வயதான சத்தியானந்த பிரபாகர குருக்கள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மனைவியான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) விரிவுரையாளர், மகன் மற்றும் மாமனார் ஆகிய மூவர் படுகாமடைந்துள்ளனர்.
மேலும் காரை ஓட்டிச்சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், விபத்து குறித்து ஓமந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
