செய்தியாளரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய வட்டுக்கோட்டை காவல்துறை - நடவடிக்கையெடுக்காத பேச்சாளர்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை தகாத வார்த்தைகளினால் தமிழ் காவல்த்துறை உத்தியோகத்தர்கள் பேசியதோடு, அவரின் கடமைக்கு இடையூறும் விளைவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை காவல் நிலையம் முன்பாக இடம்பெற்றது. வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயில் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் இரவு மோதல் இடம்பெற்றது.
அது தொடர்பில் செய்தி சேகரிப்புக்காக காவல் நிலையம் சென்ற போதே காவல்த்துறையினர் அவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வட்டு தெற்கைச் சேர்ந்த நபர் ஒருவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் தொடர்பைப் பேணி வருவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்த்துறைமா அதிபர் மற்றும் காவல்த்துறை பேச்சாளரிடம் யாழில் இருந்து இயங்கும் இணைய ஊடகம் கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ரஜீவன் என்ற இளைஞனின் வழிநடத்தலில் வட்டுக்கோட்டை காவல்த்துறை நடந்துகொள்வதாக குறித்த இணைய ஊடகம் அறிந்து , அதனடிப்படையில் பொலிஸ் நிலையத்துக்கு அவ்வூடகத்தின் செய்தியாளர் சென்றிருந்தார்.
அங்கு சென்ற செய்தியாளரை அனுமதிக்க மறுத்த உப காவல்த்துறை பரிசோதகர் மற்றும் காவல்த்துறை சேர்ந்த ஒருவரும் என இருவரும் தகாத வார்த்தைகளினால் கேள்வி எழுப்பியதுடன் காவல் நிலையத்துக்குள் வந்து பாருங்கள் பார்ப்போம் என மிரட்டல் விடுத்தனர் என்று கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததை அவதானித்த செய்தியாளர், காவல்த்துறை ஊடகப் பேச்சாளருக்கு தொடர்பை ஏற்படுத்தி தகவலைத் தெரிவித்தார். இந்த அநாகரிக சம்பவம் தொடர்பில் விசாரிக்க 10 நிமிடங்கள் தமக்கு வழங்குமாறு காவல்த்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
எனினும் அவர் பின்னர் பதிலளிக்கவில்லை. முற்றுமுழுதாக ஒரு தரப்பினருக்கு ஆதாரவாக வட்டுக்கோட்டை காவல்த்துறை செயற்படுவது செய்தியாளர் அறிந்திருந்த நிலையில் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவல்த்துறைமா அதிபர் விடுப்பில் சென்றுள்ள நிலையில் வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியும் விடுப்பில் சென்றுள்ள நிலையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த ஊடக அடக்குமுறையை முன்னெடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.