யாழ் பல்கலை மீது சுமத்தப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு: வெடித்த சர்ச்சை
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு யாழ்ப்பாண (Jaffna) பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும் கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவாக கருத்து வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார்.
யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சீன கடலட்டை பண்ணை சூழலுக்கு பாதிப்பா இல்லையா என்று ஒரு ஆய்வை செய்து தருமாறு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்திடம் கடந்த இரண்டு வருடங்களாக கோரிக்கை முன்வைத்தோம்.
இருப்பினும் அவர்கள் அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
ஆனால், கடந்த மாதம் கடற்றொழில்சார் திணைக்களங்களும் அதன் அதிகாரிகளும் வந்து கடல் அட்டையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கலந்துரையாடலை யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கடல் வளங்கள் அழிகின்றது என நாங்கள் தெரிவித்த போதும் மௌனம் காத்த யாழ் பல்கலைக்கழகம் இப்போது அந்த கடல் அட்டையை காப்பாற்ற வேண்டும் என்று கூட்டம் போடுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து வடக்கு கடல் தொழிலாளர்களை அழிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முயற்சிக்கின்றதா? என நாங்கள் பல்கலைக்கழகத்தை பார்த்து கேட்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
