இலங்கையை உலுக்கிய வித்யா படுகொலை: உச்ச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு
2015 இலங்கையை உலுக்கிய யாழ்ப்பாணத்தின் சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யாழ்.மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பிரதிவாதிகளை இந்த தண்டனையில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி 20ஆம் திகதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனு, நேற்று (30) பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது
இதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணை
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன் படி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பிரதிவாதிகள் கொலை, சதி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய குற்றங்களில் குற்றவாளிகளாக காணப்பட்டதாக தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல், யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இருவர் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல்முறையீட்டு விசாரணை
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை மேன்முறையீட்டு பிரதிவாதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்தது.
இதனை தொடர்ந்து, இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 20 ஆம் திகதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |