உக்ரைன் போருக்கு அனுப்பப்பட்ட யாழ் இளைஞர்கள் விவகாரம்! மறுக்கும் ரஷ்யா
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தூதரகம் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை அடிப்படையற்றவை. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
இந்த தகவல்களின் நோக்கம் இலங்கை - ரஷ்யா இடையிலான பாரம்பரிய நட்புறவை சீர்குலைப்பதாகும்.
ரஷ்ய வேலை வாய்ப்பு
எங்கள் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டவர்களையும், ரஷ்ய அதிகாரிகள் மதிக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு, தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை வழங்க தயாராகவுள்ளனர்.
ரஷ்யாவில் தங்கியிருக்கின்ற இலங்கையர்கள் தொடர்பான விடயத்தினை, மொஸ்கோவில் உள்ள ரஷ்யாவிற்கான இலங்கை தூதரகமே கையாள்கின்றது என்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.
நேர்மையற்ற வேலைவாய்ப்பு முகவர்கள் இலங்கையர்களை ரஷ்யாவிற்கு அனுப்புவது குறித்து தூதரகத்திற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதேவேளை, இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கோரப்பட்டால் அதற்கு உதவுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.”என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரின் சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரது இடத்திற்கு தொழில் நிமித்தமாக செல்ல முயற்சித்துள்ளார்.
இதற்கமைய, 04.10.2024 அன்று பயணித்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய (Russia) விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணம் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்ற முகவர் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரையின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |