இலங்கைக் கடற்பரப்பை சீனாவிற்கு விட்டுக்கொடுப்பது கடினம்! போட்டியாய் களமிறங்கியுள்ள கப்பல்கள்
இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்புக்களைத் தாண்டி இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் கடந்த நான்கு நாட்களாக நங்கூரமிடப்பட்டிருந்த ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக்கப்பலானது இன்று (30) இலங்கையின் மேற்குக்கடற்பரப்பில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களுக்கு அதன் ஆய்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஷி யான் 6 கப்பலின் ஆய்வு நடவடிக்கைகள் குறித்து சில விடயங்கள் கூறப்படுகின்றன.
அதாவது இலங்கையின் மேற்கு கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் வெப்பநிலை குறித்து ஆராயவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரை இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வியாக்கியானங்களும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தக் கப்பல் நீர் மூழ்கிகளின் கடலடித்தடங்கள் தொடர்பான கடற்படுக்கை வரைவுகளைச் செய்யும் உளவுப்பணிக்காக ஆய்வு என்ற போர்வையில் முக்கியமான நகர்வுகளைச் செய்வதால் இந்தியா இதன் ஆய்வுகள் குறித்த விடயத்தில் எச்சரிக்கையாகவுள்ளது.
சிறிலங்காவின் விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து இந்தக் கப்பல் தனது ஆய்வுகளை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் நேற்று முன்தினம் (28) அனுமதியினையும் வழங்கியுள்ளது.
இதன் போது இந்த ஆய்வுகள் இரண்டு தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் போது இலங்கையின் நீரியல் நிறுவனமான நாரா, றுஹுணு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் குழுவொன்றும் பங்குபற்றும் என்றும் இந்தியாவிற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தால் சீன ஆய்வுக்கப்பலுக்கு ஒரு பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன் படி, இதன் ஆய்வுகள் சிறிலங்காவின் மேற்குக்கரையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஏனைய பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்தில் ஷி யான் 6 நங்கூரமிட்ட அதே வேளை, திருகோணமலைத் துறைமுகத்தில் ஜப்பானின் அகெபோனோ போர்க்கப்பலும், கொழும்புத்துறைமுகத்தில் ஷி யான் 6 ஐ கண்காணித்த படி தென் கொரியாவின் குவான்கெட்டோ த கிரேட் என்ற போர்க்கப்பலும் நங்கூரமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது இலங்கைக் கடற்பரப்பை இலகுவில் சீனாவிற்கு விட்டுக்கொடுப்பது கடினம் என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில் இந்தக் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற இலங்கை மற்றும் உலக நிலவரங்களை தெரிந்து கொள்ள இன்றைய செய்தி வீச்சு நிகழ்ச்சியை காண்க.