100 ஆண்டுகள் முன்னோக்கி சென்ற ஜப்பான்... ஸ்மார்ட் நகரத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா!
தொழில்நுட்பத்தில் என்றுமே தனித்துவமாகவும் முன்னோக்கியும் இருக்கும் ஜப்பான் தனது அடுத்த முன் முயற்சியான ஸ்மார்ட் நகர பணிகளின் நிறைவு நிலையை அடைந்திருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு புஜி மலைக்கு அருகில் உள்ள ஹோன்ஷோ தீவில் செயல்படும் எரிமலையின் அடிவாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நகர உருவாக்காத் திட்டமானது இந்த ஆண்டு அதன் நிறைவை நெருங்கி வருவதாக அறிவித்துள்ளது.
ஜப்பானின் டொயோட்டாவால் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன தொழிநுட்ப நகரமானது எண்ணற்ற அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சுய-ஓட்டுநர் கார்கள்
இங்கு இ-பலட்டுகள் எனப்படும் ஓட்டுநர் இல்லாத அல்லது சுய-ஓட்டுநர் கார்கள் காணப்படுகிறது அதன்படி, டொயோட்டாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சோதனைகளுக்கான சோதனைக் களமாக இந்த நகரம் செயற்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த நகரம் ஐதரசன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அங்குள்ள ஸ்மார்ட் வீடுகளில், சிறப்பு சென்சர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், குடியிருப்பாளர்கள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் இடையே தடையற்ற தகவல்தொடர்புகளை செயற்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிரவும் இந்த நகரத்தில் பாரம்பரிய ஜப்பானிய கட்டிடக்கலையை நவீன வசதிகளுடன் இணைத்து, நகரத்தின் கட்டுமானம் இதற்காகவே வடிவமைக்கப்பட்ட ரோபோ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
100 ஆண்டுகள் முன்னோக்கி
அதுமாத்திரமன்றி இந்த ஸ்மார்ட் நகரத்தில் முதலில் 360 குடியிருப்பாளர்களை குடியமர்த்த தீர்மானித்துள்ள நிலையில், அதில் முதன்மையாக டொயோட்டா ஊழியர்கள் 2,000 பேர் வரை தங்க வைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் நகரத்தில் இருக்கும் வசதிகள் மற்றும் புதிய தொழிநுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் திறன்களையும் ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றமை சிறப்பான விஷயமாகும்.
இந்த நகரம் உத்தியோகபூர்வமாக ஒரு வாழும் ஆய்வகமாக செயற்படவுள்ள நிலையில், பாரம்பரிய அணுகுமுறைகளை பயன்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு உருவாக்கப்படுகின்ற இந்த ஸ்மார்ட் நகரம் மக்களை 100 ஆண்டுகள் முன்னோக்கி வாழும் அனுபவத்தை கொடுக்க இருப்பதால் இந்த நகரம் மீதான பார்வை பெரும் எதிர்பார்ப்பை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |