இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜப்பான்! வழங்கப்பட்ட உறுதி
இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, ஹிடேகி மிசுகோஷி இதனை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய நெருக்கடிகளின் போது பயன்படுத்திய திட்டங்களை இலங்கையும் பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் வளர்ச்சி
நவீன மாற்றங்களுக்கு ஏற்றவாறு ஜப்பான் விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்ந்ததாகவும் இவ்வாறான நவீன முறைகளை பின்பற்றி இலங்கை முன்னேற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானுக்கு எதிராக முழு உலகும் நின்றபோது, மறைந்த முன்னாள் அதிபர் ஜே. ஆர். ஜயவர்த்தனவின் கூற்றுக்கமைய, போருக்கு பின்னரான காலப்பகுதியில் ஜப்பான் மீண்டும் சர்வதேச சமூகத்துடன் இணைவதற்கு வழியமைத்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் அன்று முதல் இன்று வரை சிறந்த நட்புறவு காணப்படுவதாகவும், அந்த நட்புறவை இருநாட்டு தலைவர்களும் மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வதாகவும் ஹிடேகி மிசுகோஷி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் முன்னேற்றம்
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அர்பணிப்புடன் செயற்பட்டு வரும் இலங்கை, ஜப்பானை முன்மாதிரியாக கொண்டு நாட்டில் சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
At a panel discussion on "Economic Development and Modernization with Lessons from #Japan," chaired by President Ranil Wickremesinghe, Japanese Ambassador Mizukoshi Hideaki expressed ??'s support for the current program aimed at rebuilding the Sri Lankan economy. (1/5) pic.twitter.com/W8mWtNJ5GP
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) March 22, 2024
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பானை போன்று போட்டித் தன்மை மிக்க தொழில்துறையை கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், போட்டித் தன்மை நிறைந்த ஏற்றுமதி கைத்தொழில்களை உருவாக்குவதற்காக தொழில் கொள்கைகளை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் கீழ் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக ஜப்பான் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் ஹிடேகி மிசுகோஷி குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |