சீனாவின் எதிர்ப்பையும் மீறி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை பசுபிக் பெருங்கடலில் வெளியேற்ற ஜப்பான் தீர்மானம்!
புகுஷிமா அணுமின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரினை நாளை மறுதினம் (24) பசுபிக் பெருங்கடலுக்குள் வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற மந்திரி சபைக் கூட்டத்திலே இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாரிய நிலநடுக்கத்தின் விளைவாக ஜப்பானில் உருவான சுனாமியால் கடல் நீர் அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்திஇருந்தது.
இதன் விளைவால் மேலும் ஏற்படவிருக்கும் சேதத்தினைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாக கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது.
தொழில்நுட்ப பொறியாளர்கள்

இதனால் அசுத்தமான கடல் நீர் காலப்போக்கில் ஆணு ஆலைக்குள் பெருமளவில் தேங்கி இருந்தது.
அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்வதற்கு, தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்கள் செய்தனர்.
ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவிக்கக்கூடாது என்று ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தாய்வான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன.
நடவடிக்கைக்கு அனுமதி

சர்வதேச அணுசக்தி அமைப்பும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று உறுதியளித்து இந்த நடவடிக்கைக்கு அனுமதியினையும் அளித்துள்ளது.
இந்நிலையிலே அனைத்து எதிர்ப்புகளின் மத்தியிலும் வருகிற 24ஆம் திகதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.