உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் : ஜப்பான் விஞ்ஞானிகள் படைத்த சாதனை
சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
மக்கள் அன்றாட வாழ்வில் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பிளாஸ்டிக் நீண்ட காலம் மக்காமல் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.
உப்புத் தண்ணீரில் கரையும் புதிய வகை பிளாஸ்டிக்
இப்பிரச்சினையை தீர்க்க ஜப்பானில் உள்ள எமர்ஜென்ட் மேட்டர் சயன்ஸ் (செம்ஸ்) ஆய்வு மைய விஞ்ஞானிகள் புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர்.
இதை பயன்படுத்தும்போது உறுதியாக இருக்கும். உப்புத் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து விடும். தண்ணீரில் கரைந்ததும், அது தீங்கற்ற பொருட்களாக மாறி சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும்.
ஆராய்ச்சி குழுவுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி
இது குறித்து இந்த ஆராய்ச்சி குழுவுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி டகுசோ அய்தா கூறியதாவது: சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைக்கு தீர்வு காண சுப்ரமாலிகுலர் பிளாஸ்டிக் பாலிமர்களை பயன்படுத்தி புதிய பிளாஸ்டிக்கை உருவாக்கினோம்.
இரண்டு அயனி மோனோமர்களை இணைப்பதன் மூலம் இந்த பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. அவை வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன.
இந்த மோனோமர்களில் ஒன்று, பொதுவாக உணவில் சேர்க்கப்படும் சோடியம் ஹெக்ஸாமெட்டாபாஸ்பேட் மற்றொன்று பல குவானிடினியம் அயனி அடிப்படையிலான மோனோமர். இரண்டு மோனோமர்களும் பாக்டீரியாவால் வளர்சிதை மாற்றம் செய்யப்படும். பிளாஸ்டிக் உப்புத் தண்ணீரில் கரைந்தவுடன் மக்கும் தன்மையை உறுதி செய்கிறது என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
