முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக்கோரும் அமைச்சரவைப் பத்திரம்! ஜீவன் திட்டவட்டம்
முஸ்லிம் சமூகத்திடம் அரசாங்கம் முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் முன்வைக்கப்படுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காலப்பகுதியில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட “கட்டாய சடலம் எரிப்பு (ஜனாசா எரிப்பு)” கொள்கை தொடர்பிலேயே இந்த மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தகவலை அவர் ஹட்டன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கூறியுள்ளார்.
உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் மக்களின் உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கை என்பன கருத்திற்கொள்ளப்படாமல் கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த சமூகத்தினர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதால் நிலத்தடி நீருக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது எனவும் நீர்வளம் மாசுபடாது எனவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி இருந்தபோதிலும் விஞ்ஞானபூர்வமான விடயங்களைக் கருத்திற்கொள்ளாமல் சடலங்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டதாகவும் ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் , முஸ்லிம் மக்களிடம் அரசாங்கம் முறையாக மன்னிப்புக் கோர வேண்டும் என்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |