கெளரவமாக வளர்க்கப்பட்டவர் ஜீவன்! நாவை அடக்கிப் பேச வேண்டும் - எச்சரித்த இராதாகிருஸ்ணன்
இ.தொ.காவின் பாசறையில் வளர்ந்து வந்தவன் என்ற அடிப்படையில் இன்றைய தலைவர்களின் சொற் பிரயோகம் அனைத்து தாய்மார்களையும் அவமதிக்கின்ற ஒரு செயலாகும் இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியினக் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ள கருத்து அனைத்து தாய்மார்களையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதனை மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பாசறையில் வளர்ந்து வந்தவன் என்ற அடிப்படையில் இது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயமாக இருக்கின்றது.
நாங்கள் மலையகத்தின் தந்தை என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அமரர் சௌமிய மூர்த்தி தொண்டாமானின் பாசறையில் மிகவும் கௌரவமாக வளர்தெடுக்கப்பட்டோம்.
அவர் எங்களை மிகவும் கண்ணியமான மரியாதைக்குரிய அரசியலை செய்ய வேண்டும் என்பதை கற்பித்திருக்கின்றார்.
அதே போல அமரர் ஆறுமுகன் தொண்டமான் இந்த அமைப்பை மிகவும் பொறுப்புடன் கட்டி வளர்த்து வந்திருக்கின்றார்.
அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் நான் அந்த பாசறையில் இருந்து வெளியேறிய போதிலும் இதுவரையில் நான் அந்த அமைப்பை எந்த சந்தர்ப்பத்திலும் விமர்சனம் செய்ததில்லை.
அதற்கு காரணம் நான் அந்த பாசறையில் வளர்ந்து வந்தவன் என்பதே. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஒரு மூத்த அரசியல்வாதி அவர் இந்த நாட்டில் முக்கிய அமைச்சராக பதவி வகித்தவர்.
எனவே எந்த காரணம் கொண்டும் யாரையும் கொச்சைப்படுத்த முடியாது. அதிலும் குறிப்பாக யாருடைய தாயாராக இருந்தாலும் அவர்களை கொச்சைப்படுத்த முடியாது.
அனைத்து தாய்மார்களையும் எங்களுடைய தாய்மார்களாகப் பார்க்க வேண்டும் என்பதே அனைவருடைய கருத்தாகும்.
எனவே இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறக் கூடாது என்பதுடன் இதன் மூலம் ஜீவன் தொண்டமான் தனது நாவை அடக்கி பேச வேண்டும்.
என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு தலைமை தாங்குகின்றேன் இளைஞர்களை வழிநடத்துகின்றேன் என்று வாய்ச் சொல்லில் வீரராக இல்லாமல் அதனை செயலிலும் காட்ட வேண்டும்.
மலையக இளைஞர்களுக்கு பிழையான வழிகாட்டலை செய்துவிடாதீர்கள்.
இந்த கூட்டத்தில் ஜீவன் பேசுகின்ற விடயத்தை கேட்டு கைதட்டுகின்றவர்களும் அதனை சிந்தித்திருக்க வேண்டும். இவ்வாறான விடயங்களை ஊக்கப்படுத்த கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.