இறுதி நேரத்தில் இரத்தான ஆளுநர் - மக்கள் சந்திப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் மாதகல் காணி உரிமையாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதும் திடீரென அந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தால் காணி உரிமையாளர்களுக்கு, இன்று மதியம் 2 மணிக்கு வடமாகாண ஆளுநர் காணி உரிமையாளர்களை சந்திக்கவிருப்பதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென அந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.
குறித்த சந்திப்பானது நாளை காலை 8 மணிக்கு நடைபெறும் எனவும் ஒரு சில காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேரடியாக சென்று காணி உரிமையாளர்கள் கேட்டபொழுது, இந்த சந்திப்பு தொடர்பில் நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் இந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
நாளை இந்த சந்திப்பு இடம் பெறுவது தொடர்பாகவும் எமக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆளுநரை சந்திக்க தூர இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதாக அங்கிருந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.