சிறிலங்காவிற்கு ஜெனிவாவில் காத்திருக்கும் பேராபத்து- சிங்கள ஊடகம் எச்சரிக்கை
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், இந்த வருடத்தின் 49 ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கிய நோக்கம், போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு இலங்கையின் பொறுப்பை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே என ஜெனிவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜெனிவா மாநாடு பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கும், மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்(Michelle Bachelet) பெப்ரவரி 29 ஆம் திகதி தனது அறிக்கையை வெளியிடுவார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதால், இம்முறை இலங்கைக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவதா இல்லையா என்ற முடிவையும் பாதிக்கும்.
மிச்செல் பச்லெட் இன் இலங்கைக்கு எதிரான அறிக்கை வெளிவரும் வரை இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இம்முறை ஜெனிவாவில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி ஏற்படுமென சிறிலங்காவின் ஓய்வு பெற்ற படைத்தளபதி மேஜர் ஜெனரல் சாகி கல்லகே எச்சரித்திருந்மையும் குறிப்பிடத்தக்கது.
