வேலையில்லாப் பட்டதாரிகளைப் புறக்கணிக்கும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு
நாட்டிலுள்ள 35,000 வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்காமல் அரசாங்கம் வேண்டுமென்றே புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இன்றைய (11) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”இலவசக் கல்வியின் கீழ் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர் நிலை என ஒவ்வொரு நிலைக்கும், ஒரு மாணவருக்கு அரசாங்கம் ஆண்டுக்கு எவ்வளவு தொகையை செலவழிக்கிறது? இது தொடர்பாக அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வேதையும் மேற்கொண்டுள்ளதா?
தொழிற் பயிற்சி வழங்குதல்
உயர் தரத்தில் கலை, வணிகம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் பயிலும் மாணவர்கள், தங்கள் பட்டப்படிப்பு முடிவடையும் திகதியிலிருந்து வேலை கிட்டும் வரை எடுக்கும் காலம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்த ஏதேனும் ஆய்வுகள் உண்டா? அவ்வாறானால், எடுக்கும் காலத்தை தனித்தனியாக குறிப்பிடவும்?
மேலும், இதுவரை 580 சுதேச மருத்துவ பட்டதாரிகள் தங்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். இவர்களுக்கு தொழிற் பயிற்சி (Internship) வழங்க அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களுக்குரிய தொழிற்ப் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலையற்ற பட்டதாரிகள் எத்தனை பேர் உள்ளனர்? இந்த பட்டதாரிகளில் வெளிவாரி, உள்வாரி, திறந்த மற்றும் தனியார் பல்கலைக்கழக பட்டதாரிகள் எத்தனை பேர் உள்ளனர்?
பட்டதாரிகளின் எண்ணிக்கையை அவர்கள் பெற்ற பட்டப்படிப்புக்கு ஏற்ப தனித்தனியாக முன்வைக்க முடியுமா? தொழில் சந்தையில் நுழைய முடியாமல் எந்த அடிப்படையில் அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்? இது குறித்து அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வுகள் என்ன? அவற்றை சபையில் முன்வைப்பீரா?
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 72 ஆவது பக்கத்தில் வேலையில்லா பட்டதாரிகள் 35,000 பேருக்கு முறையான ஒழுங்கின் கீழ் துரிதமாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லாப் பட்டதாரிகள்
இதன் பிரகாரம், எத்தனை பட்டதாரிகளை இந்த ஆண்டு சேர்த்துக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது? இவை எந்தெந்த துறைகளுக்கு? இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது?
வேலை தேவைப்பாட்டின் அடிப்படையில், அரசாங்கம் அவர்களை ஏதாவது தகுதி அடிப்படையிலா இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறது? இல்லையென்றால், ஏதேனும் போட்டிப் பரீட்சை மூலமாகவா இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கின்றது?
கலைப் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை தேடும் நெருக்கடியில் இருந்து வருவதால், இந்த நிலையை முடிவுக்கு கொண்டு வர இதுவரையில் அரசாங்கம் முன்வைத்துள்ள கல்விச் சீர்திருத்த முன்மொழிவுகள் யாவை?
தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி, இந்த பட்டதாரிகளுக்கு 45 வயது வரம்பைப் பொருட்படுத்தாமல் போட்டிப் பரீட்சைகளில் தோற்றுவதற்கு அனுமதியளிக்க வேண்டும். இந்த வேலையில்லாப் பட்டதாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும்.
வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில், இதற்கான பதிலை பின்னர் முன்வைப்பதாக ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர். இதற்கு பதில் வழங்க அரசாங்கம் கால அவகாசம் கேட்பது நியாயமற்றது.
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையில் இந்த 35,000 பேருக்குமான பதில்கள் இருக்க வேண்டும். இதற்கு பதிலளிக்க அரசாங்கம் கால அவகாசம் கேட்டதன் மூலம், இந்த பிரச்சினைக்கு பதில் அளிக்காமல் அரசாங்கம் வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவே தோன்றுகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்