சட்டவிரோத சொகுசு கார் வழக்கு...! குற்றச்சாட்டை ஒப்புகொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
சட்டவிரோத சொகுசு பி.எம்.டபிள்யூ (BMW) காரை வைத்திருந்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஒப்புக்கொண்டுள்ளார்
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட சட்டவிரோத சொகுசு பி.எம்.டபிள்யூ காரை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (28-10-2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்படி கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேகர முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சட்ட மீறல்கள்
வரி ஏய்ப்பு மற்றும் மோட்டார் வாகனச் சட்ட மீறல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கானது விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது தனது கட்சிக்காரர் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்வதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபருக்கான தண்டனைத் தீர்ப்பை (Sentencing) எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
அன்றைய தினம் முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய உரிய தண்டனைகள் குறித்து அரசுத் தரப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தங்களது கோரிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |