கிளிநொச்சியில் கடுமையாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர் : யாழ். ஊடக மன்றம் வன்மையான கண்டனம்
கிளிநொச்சியில் ஊடத்துறையில் பணியாற்றி வருகின்ற முருகையா தமிழ்ச்செல்வன் மீது நடத்தப்பட்ட தாக்கதலுக்கு யாழ். ஊடக மன்றம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களிலே குறிப்பாக யுத்த காலத்திலும் அதற்கு பின்னைய காலத்திலும் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, நில அபகரிப்பு, சட்டவிரோத போதைப்பொருள், அரச முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைத் தனித்துவமாக துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்தவர்.
இவ்வாறு பக்கச் சார்பின்றி துணிச்சலாக செயற்பட்டு வந்த ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தனது ஊடகப் பணியை முடித்துவிட்டு சென்ற வேளை இனம் தெரியாதவரால் மறிக்கப்பட்டு கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
உண்மைத் தன்மை
இதிலிருந்து அவர் தப்பிச் சென்ற போது அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் ஊடகப் பரப்பிலேயே அச்சுறுத்தலையும் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வருபவர்களுக்கு விடுக்கப்படுகின்ற சவாலாகவும் இருந்து வருகிறது.
ஊடக பரப்பில் பணியாற்றுபவர்களின் உத்வேகத்தை முடக்குகின்ற இவ்வாறான திட்டமிட்ட செயல்கள் தொடர் கதையாகவே உள்ளது யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளிலே பல்வேறு கோணங்களிலும் பல அரச நிர்வாகங்கள் ஊடாகவும், சில குழுக்களாலும் தமிழ் இனக் கட்டமைப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் பல ஆக்கிரமிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் கிளிநொச்சி மாவட்டத்திலும் பல்வேறு தரப்பட்ட செய்திகளையும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் தெரிவித்து வந்த ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமை என்பது ஒரு திட்டமிட்ட செயலாகவே கருத முடிகிறது.
இவ்வாறு பக்கச் சார்பற்ற விடயங்களைக் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை அதிகரித்து வருகிறது.
நீதியான விசாரணைகள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலக்கு வைத்தே இத் தாக்குதல்கள் அரங்கேறுகின்றன.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அண்மையில் சில ஊடகவியலாளர்கள் இவ்வாறு 'இனம் தெரியாதோரால் நடாத்தப்படும் தாக்குதல்' என்ற போர்வையில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டனர்.
இருப்பினும் அது தொடர்பில் சட்டம், நீதி, ஒழுங்கு என்கிற விடயங்களை கையாளுகின்ற பல்வேறு தரப்புகளாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படவோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ வழங்கப்படவில்லை.
தற்போது புதிய அரசாங்கம் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆட்சிக்கு வந்த போதிலும் இவ்வாறான தாக்குதல்கள், மிரட்டல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட புதிய அரசு இவ்வாறான விடயங்களில் கரிசனை காட்ட வேண்டும் அத்துடன் இச்சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் யாழ். ஊடக மன்றம் மிகவும் வினயமாக கேட்டுக்கொள்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |