ஊடகவியலாளர் நடேசன் கொல்லப்பட்ட தினம் இன்று
தமிழர் தாயக மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை ஐபிசி- தமிழ் உட்பட்ட ஊடகத்தின் ஊடாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த காரணத்தால் மட்டக்களப்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகர் ஐயாத்துரை நடேசனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதியனறு மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை வேளை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது அரச தரப்பு ஆயுதாரிகளால் தனது 50 வயதில் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தர்.
IBC-தமிழ் வானொலி, உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர். நீண்ட கால ஊடகப் பணி அனுபவம் பெற்றிருந்த நடேசன் இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் அரசதரப்பு ஆயுதாரிகளின் ஒடுக்குமுறைகள் குறித்து அவ்வப்போது வெளிப்படுத்திவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருணா குழு என்ற பெயரில் நடமாடித்திரிந்தவர்களால் நடேசன் படுகொலை செய்யப்பட்டதும், இன்று அரசியலில் உள்ள ஒரு முக்கிய புள்ளி நடேசனின் படுகொலையில் நேரடியாகப் பங்குபற்றியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.