யாழில் ஊடகவியலாளர்களை சமூக விரோதிகளாக சித்தரித்த பாடசாலை: வெடித்த சர்ச்சை
யாழில் (Jaffna) செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை நாகர் கோவில் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூக விரோதிகள் போல சித்தரித்து வெளியேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா விமான படையினரின் குண்டு வீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் 22 ஆம் திகதி பலியான மாணவர்களின் நினைவுத்தூவியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை வளாகம்
இந்நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூக விரோதிகள் போல சித்தரித்து வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் நாகர் கோவில் பகுதியில் உள்ள பாடசாலையான நாகர் கோவில் மகாவித்தியாலயத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, பாடசாலை வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் பாடசாலை ஆசிரியர்கள், இவ் நினைவேந்தலுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த நிலையில் பெரிய வாக்கு வாதம் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளர்கள்
வலயக்கல்வி பணிப்பாளரால் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட கூடாது என தெரிவிக்கப்பட்டமையினால் இந்நிகழ்வில் யாரும் செய்தி சேகரிக்க முடியாது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஊடகவியலாளர்கள் உடனடியாக வலயக்கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்ட நிலையில், பணிப்பாளர் தான் அது சம்பந்தமாக எந்த விதமான கட்டளையும் விடவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாடசாலை அதிபரிடம் ஊடகவியலாளர் உரையாட விரும்பிய போது சம்பவ இடத்துக்கு வருகை தந்த அதிபர் ஊடகவியலாளர்களை விட முடியாது என தெரிவித்துள்ளார்.
குண்டு தாக்குதல்
அத்தோடு, ஊடகவியலாளர்கள் இதில் நிற்பது சட்ட விரோதமான செயற்பாடு எனவும் காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் பலத்த தொனியில் தெரிவித்து ஊடகவியலாளர்களை நுழைவாயிலுக்கு வெளியில் விடப்பட்டு கதவினை பூட்டி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்பு, நினைவேந்தலுக்கு வந்த விமான குண்டு தாக்குதலில் பலியான உறவினர்களிடம் சென்று, ஊடகவியலாளர்கள் இந்நினைவேந்தலில் குழப்பம் ஏற்படுத்த வந்த சமூகவிரோதிகள் ஆகவே நீங்கள் அவர்களை போய் விரட்டுங்கள் எனவும் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், தனது சொந்த தேவைக்காக தகவல் சேகரிக்க வந்த நபர் ஒருவர் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரு சம்பவம் ஒன்றும் அதிபரின் சொந்த விருப்பில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
