ரணிலின் கைது விவகாரத்தில் தவறிழைத்த காவல்துறை : அஜித் பி பெரேரா குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைது விவகாரத்தில் காவல்துறை சுயாதீனமாக செயற்படவில்லை எனவும் நீதித்துறை சம்பிரதாயங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா (Ajith Perera) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவை குறித்து சட்டமா அதிபர் திணைக்களமும், காவல்துறை ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில், ''காவல்துறை ஒரு நிறுவனமாக சுயாதீனப்படுத்தப்பட வேண்டியது குறித்து நாம் பல தசாப்தங்களாக பேசிக் கொண்டிருக்கின்றோம். அதற்காகவே காவல்துறை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
அந்த வகையில் காவல்துறை அதிகாரிகளும் சுயாதீனமாக செயற்பட வேண்டும். அவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழல் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.
வரலாற்றில் முதன் முறையான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு காவல்துறை அதிகாரியொருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
குறித்த காவல்துறை அதிகாரிக்கான ஒப்பந்தம் வருடாந்தம் நீடிக்கப்பட வேண்டுமெனில் அவர் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை திருப்திப்படுத்தும் வகையிலேயே செயற்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதன் பின்னணியில் காவல்துறையின் சுயாதீனத்தன்மை இழக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.
வசந்த சமரசிங்க மீதான முறைப்பாடு
ஷானி அபேசேகர (Shani Abeysekara) சிரேஷ்ட காவல்துறை அதிகாரி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது இறுதி பதவி காலத்தில் எதிர்கொண்ட சில சம்பவங்களால் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு சாதாரண பிரஜையாக மாறியிருப்பது கவலைக்குரியது. இதன் காரணமாகவே காவல்துறை திணைக்களத்தின் சுயாதீனத்தன்மையும் இழக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகள் நிறைவடைய முன்னரே அது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குற்றப்புலனாய்வுப்பிரிவு அறிவித்துள்ளது.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விசாரணைகள் நிறைவு செய்யப்பட முன்னரே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இது ரணில் விக்ரமசிங்க என்ற தனிநபருடன் தொடர்புடைய காரணியல்ல. நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் ஆகும். வசந்த சமரசிங்கவுக்கு ஒரு விதத்திலும், ரணிலுக்கு இன்னொரு விதத்திலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். காவல்துறை ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

