நீதியும் தர்மமும் தான் வெல்லும் - வியாழேந்திரன் திட்டவட்டம்
நீதியும் தர்மமும் தான் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏப்ரல் 21 - சீயோன் தேவாலய குண்டு வெடிப்பில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரியின் உடலை மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கள்ளியங்காடு மயானத்தில் புதைத்தமையை எதிர்த்தமைக்காக பொலிஸாரால் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(11) எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கடந்த ஏப்ரல் 21 அன்று மேற்கொண்ட மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமாக தற்கொலை குண்டுத் தாக்குதலால் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம்.
அதன்போது சீயோன் தேவலயத்தில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட அந்த பயங்கரவாதியின் உடலை மட்டக்களப்பு நகரிலே அமைந்துள்ள கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கு மேற்கொண்டபோது, எமது மக்களின் மயானத்தில் அந்த பயங்கரவாதியின் உடலைப் புதைக்க வேண்டாம் என மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது மக்களின் பிரதிநிதிகளான நாங்களும் அவ்விடத்திற்குச் சென்று மக்களுடன் இணைந்து குரல் கொடுத்தோம். அப்போது பொலிஸார் எம்மை பலமாகத் தாக்கினார்கள். அதில் பெண்கள் என்றும் பாராமல் தாக்குதல் மேற்கொண்டனர். அதன்போது செல்வி மனோகரன், சி.அனோஜன், சுசிகலா, யோ.றொஸ்மன், அதிலே காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த நிலையில் அவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுடன் என்னையும் சேர்த்து 5 பேருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடுத்தார்கள்.
எம்மைப் பொறுத்தளவிற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்பெயரில் அந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகம் கள்ளியங்காடு இந்து மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. ஆகவே அந்த மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது.
ஆனாலும் நாம் 2019 இதிலிருந்து தொடச்சியாக வழக்கிற்கு வந்து செல்கின்றோம். தற்போது கொவிட் - 19 சூழல் காரணமாக எதிர்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி மீண்டும் வழக்கிற்குரிய திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எம்மைப் பொறுத்தளவிற்கு நாம் மக்களோடு மக்களாக நின்று களத்திற் நின்று செயற்பட்டோம் அதனால் நாம் அதிலே வெற்றி பெற்றுள்ளோம். இருந்த போதிலும் பொலிஸார் எம்மீது பொய்யான குற்றத்தைச் சுமத்தி இந்த வழக்கை தொடுத்திருக்கிறார்கள்.
எது எவ்வாறாக இருந்தாலும் நீதியும் தர்மமும் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.