கேள்விக்குறியான வடக்குக்கான நீதி: தெற்கிலிருந்து எதிரொலிக்கும் குரல்!
தற்போதைய அரசாங்கம் 'வலிந்து காணாமலாக்கப்படல்' என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தாத பட்சத்தில் இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில் இதனைச் செய்யமுடியும்? என்று தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் “செம்மணி” புத்தக வெளியீட்டு நிகழ்வில் இடம்பெற்ற இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனிதப்புதைகுழிகள்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது பிரிட்டோ பெர்னாண்டோ மேலும் தெரிவித்ததாவது, “வடக்கில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட அட்டூழியங்கள் தொடர்பில் தென்பகுதி மக்களுக்குத் தெளிவூட்டும் வகையில் இப்புத்தகத்தை வெளியிட்டமைக்கு முதலில் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வடக்குக்கான நீதி
இதனை இடைநடுவில் கைவிடாமல், தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள்.நாட்டில் மீண்டும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறாதிருக்கவேண்டுமாயின், முதலாவதாகக் கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும்.
இவ்விடயத்தில் தெற்கில் கொந்தளிப்பு ஏற்படாமல் வடக்குக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு. ஏனெனில் நாம் கடந்தகாலங்களில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தோம்.
அவ்வாறிருந்தும்கூட 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் கோட்டாபயவுக்கே வாக்களித்தனர்.
நாமறிந்தவரை தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியின்போது பெரும் எண்ணிக்கையானோர் மிகமோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
அரசாங்கத்தினால் தீர்வு
சிங்களமொழியைப் பேசக்கூடியவர்கள் வாழும் தெற்கின் நிலைவரம் இவ்வாறிருக்கையில், வடக்கில் என்னவெல்லாம் நடந்திருக்கக்கூடும்? எனவே இதுபற்றிய தெளிவூட்டலை சகல தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தி, இதற்கான நீதியை சகலரதும் கோரிக்கையாக மாற்றவேண்டும்.
ஜே.வி.பி கிளர்ச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எம்முடன் பேரணியாக நடந்தார். ஆனால் வடக்கில் பலர் கொல்லப்படுவதற்கு அவரே காரணமாக இருந்தார்.
அதேபோன்று ரணில் விக்ரமசிங்கவும் சித்திரவதைக்கூடங்களை நடாத்தினார்.ஆனால் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அவர் இணையனுசரணை வழங்கினார்.
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய அரசாங்கம் 'வலிந்து காணாமலாக்கப்படல்' என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில் இதனைச் செய்யமுடியும்?” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
