நீதிபதி சரவணராஜாவிற்கு அழுத்தம் : சவால் விடும் நீதி அமைச்சர்
தனக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் விடுக்கப்படுவதாக தெரிவித்து தனது நீதிபதி பதவியை துறந்நு வெளிநாடு சென்ற நீதிபதி சரவணராஜாவிற்கு யாராவது அழுத்தம் கொடுத்திருந்தால் அது தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச எத்திர்க்கட்சிக்கு சவால் விடுத்தார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தீர்ப்பை மாற்றுமாறு முல்லைத்தீவு நீதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்த நிலையிலேயே நீதியமைச்சர் மேற்கண்ட சவாலை விடுத்தார்.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் தான் பதவியிலிருந்து விலகுவதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அறிவித்ததாக நீதியமைச்சர் தெரிவித்தார்.
அப்படி அவர் செய்திருக்க கூடாது
அவருக்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் அவர் நட்டை விட்டுச் சென்ற பின் முறைப்பாடு செய்திருக்க கூடாது. அரசியலமைப்பின் பிரகாரம், தன்னை அச்சுறுத்திய நபருக்கு அழைப்பாணை விடுத்து அவரை மன்றுக்கு முன் முன்னிலைப்படுத்த அல்லது பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.
மேலும் குறித்த நபருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து அவரைத் தண்டிக்கவோ இல்லாவிட்டால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்கு இது குறித்து தெரியப்படுத்தியிருக்க முடியும்.
அவர் தான் பொறுப்புக்கூற வேண்டும்
தனது அதிகாரங்களை அவர் பயன்படுத்தாவிட்டால் அதற்கு அவர் தான் பொறுப்புக்கூற வேண்டும் என நீதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நீதிபதி சம்பந்தமான விவகாரத்தில் தலையிட அரசாங்கத்திற்கு எதுவித அதிகாரமும் இல்லை. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கே இதைக் கையாளும் அதிகாரம் உள்ளது. இது தொடர்பில் யாருக்காவது ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் என அமைச்சர் விஜயதாஸ தெரிவித்தார்.