தமிழர்களுக்கான தீர்வு: சிங்கள பேரினவாத முகத்தை வெளிக்காட்டிய ரணில் (காணொளி)
சிறிலங்காவின் பேரினவாத சிங்களத் தலைவர்கள் மத்தியில் மிதவாத தலைவராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவராகவும் கடந்த காலங்களில் அறியப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் உண்மைமுகம் படிப்படியாக வெளிவர ஆரம்பித்துள்ளது.
இனப் பிரச்சினைக்கான தீர்வை மாத்திரமல்லாமல், இறுதிக் கட்டப் போரின் போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றங்களுக்கு நீதியான விசாரணையையும் உறுதிசெய்வார் என இதுவரை காலமும் தமிழ் மக்கள் நம்பியிருந்த நிலையில், அதனை பொய்யாக்கும் வகையில் ஜேர்மனிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தனது சிங்கள பேரினவாத முகத்தை ரணில் விக்ரமசிங்க வெளிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மாத்திரமல்ல, எந்தவொரு விடயங்களுக்கும் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள தாம் இடமளிக்கப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை நீதிக்காக போராடும் தமிழ் மக்களுக்கு பேரிடியான செய்தியாக அமைந்துள்ளது.
சர்வதேசத்தை அனுமதிக்கப் போவதில்லை
இந்த கருத்து மூலம் இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளிலும் சர்வதேசத்தை அனுமதிக்கப் போவதில்லை என்ற கருத்தை ரணில் விக்ரமசிங்க மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்கை வலியுறுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணையை வழங்கியிருந்தது.
எனினும் சர்வதேச விசாரணைகளை அனுமதிக்கப் போவதில்லை என தற்போது கூறியுள்ளதன் மூலம், கடந்த காலங்களில் ஐ.நா தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியதன் பின்னணியில் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் உண்மையான நோக்கம் இருந்ததா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள் என்கிறார் கெமுனு விஜேரத்ன
ரணில் விக்ரமசிங்கவின் உண்மைமுகம்
ஆழ்மனதில் சர்வதேச விசாரணைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் சர்வதேச விசாரணைக்கு ஆதரவான ஒருவர் என்ற போலி நிலைப்பாட்டை வெளிப்படுத்தியமை தற்போதைய அவரின் சர்வதேச விசாரணை தொடர்பான கருத்து மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேற்குலக ஆதரவு கொண்ட ஒருவராக அறியப்பட்ட ரணில் விக்ரமசிங்க, ஜேர்மனியின் அரச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் மேற்குலக நாடுகளையும் கடுமையாக சாடியுள்ளார்.