இடைத்தரகராக செயல்படும் ரணில் விக்ரமசிங்க! விமர்சிக்கும் ஜே.வி.பி
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லையென கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தமது கட்சியுடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய தேவை நிதியத்துக்குக்கு இருக்கும் பட்சத்தில், அவர்களின் கோரிக்கைக்கமைய சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய தேசிய மக்கள் சக்தி தயார் என சுனில் ஹந்துன்நெத்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்றிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குறித்த சந்திப்பை புறக்கணித்திருந்தது.
இடைத்தரகர் ரணில்
இந்த நிலையில், நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியினருக்கிடையில் ரணில் விக்ரமசிங்க இடைத்தரகர் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை காரியாலயத்தில் நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஏற்கனவே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததை நினைவூட்டிய அவர், தேவை ஏற்பட்டால் மற்றுமொரு சந்திப்பை இவ்வாறாக நடத்த தயார் என கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் உடன்படிக்கையை மேற்கொள்ளும் போது தமது கட்சி மாத்திரமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடம் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்திப்புக்களை ஏற்பாடு செய்வது நகைப்புக்குரியது என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |