முல்லை - மூங்கிலாற்றில் பிள்ளையார் சிலை உடைப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலை உடைத்து களவாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் முறைப்பாட்டினை பதிவு செய்ய மறுத்ததாக ஆலய நிர்வாக தலைவர் இன்று (05) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பிள்ளையார் இல்லாத காரணத்தினால் பிள்ளையார் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர். இந்நிலையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு பூசைகள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து கடந்த 03ஆம் திகதி அன்று ஆலய குருவை நித்திய பூசை செய்ய வேண்டாம் எனவும் ஆலயத்தை தொடர்ந்து பராமரித்து வரும் அயலவர்களை கோவில் பக்கம் செல்லவேண்டாம் என்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரித்த நிலையில் அன்று இரவே சிலை காணாமல் போயுள்ளது.
இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு பதிவு செய்ய முயற்சித்தபோது பொலிசார் முறைப்பாடு பதிவு செய்யாது திருப்பி அனுப்பியதாக ஆலய நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார்.




