மது போதையில் இளைஞனை மோதி தப்பிச் சென்ற வைத்தியர்: காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை
கல்முனையில் (Kalmunai) வீதியால் பயணம் செய்த இளைஞனை எதிரே காரை செலுத்தி வந்த வைத்தியர் மோதியதுடன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் காவல்துறையினரினால் கார் மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்று (8) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வைத்தியர் கைது
இதேவேளை குறித்த விபத்தை ஏற்படுத்திய வெள்ளை நிற கார் வண்டி தப்பி சென்ற நிலையில் அதே வைத்தியசாலை வளாகத்தில் தரித்து நின்ற நிலையில் கல்முனை தலைமையக போக்குவரத்து காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் காரை செலுத்தி சென்ற வைத்தியரும் கைதுசெய்யப்பட்டு கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான வைத்தியரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்று வருவதுடன் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை
அத்துடன் குறித்த காரினை செலுத்திய வைத்தியருக்கு வாகன சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் குடிபோதையில் காரினை செலுத்தி வந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் கல்முனை காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |