கந்தகாடு மையத்தில் மோதல்: ஒருவர் பலி! 600இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்
கந்தகாடு மையத்தில் மோதல்
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்தவும் தப்பியோடிய கைதிகளை கைது செய்யவும் இராணுவமும் காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி தல்துவா தெரிவித்தார்.
சம்பவத்தின் பின்னணி
நேற்றிரவு தடுப்பு முகாமில் இருந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னர் முகாமுக்குள் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றியிருந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் மீது கைதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும்,
இன்று காலை சுமார் 500-600 கைதிகள் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
