பசுமை நகரமாக மாறவுள்ள கண்டி : உலக வங்கியிடம் முன்வைக்கப்படவுள்ள யோசனை
கண்டியை பசுமை நகரமாக மாற்றுவதற்கு உலக வங்கியிடம் யோசனை முன்வைக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று வருடங்களில் பசுமை நகர யோசனையும், (The Green City concept) உத்தேச பல்வகை போக்குவரத்து மையமும் (Multi Transport hub) கொண்டு செல்லப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
கண்டி நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பல்வகை போக்குவரத்து நிலையத்தின் அபிவிருத்தியை அவதானித்தல் மற்றும் மீளாய்வு செய்வது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
200 மின்சார பேருந்துகள்
மூவாயிரம் கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ஊடக மையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாம் ஈடுபடவில்லையென்றாலும் கூடுதலாக விஸ்தரிக்கப்பட வேண்டிய பல வீதிகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் இத்திட்டத்தின் வெற்றிக்கு வீதி அபிவிருத்தி பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
கட்டுகஸ்தோட்டை, குண்டசாலை, பேராதனை, தென்னகும்புர உள்ளிட்ட பல கண்டியை அண்மித்துள்ள புறநகர் பகுதிகளின் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாட பட்டதாகவும், அதற்காக இரண்டாயிரம் கோடி ரூபா தேவைப்படுவதாகவும், கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வது குறித்தும் எதிர்காலத்தில் உலக வங்கியுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் கூறினார்.
கண்டியை பசுமை நகரமாக மாற்றும் வகையில் வளி மாசுபடாத போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 200 மின்சார பேருந்துகள் கண்டிக்கு வழங்கப்படவுள்ளதாக உலக வங்கிக்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |