கரூர் சம்பவம்: ஈழத்தமிழர் சார்பில் இரங்கல் தெரிவித்த சிறீதரன் எம்.பி!
புதுமுக அரசியல் கட்சியான த.வெ.கவினதும், நண்பர் விஜயினதும் அரசியல் பயணம், துயரமிகுந்த இந்த உயிர்த்தியாகங்களின் மீது உறுதி மிக்கதாகவும், மக்கள்மயப்பட்டதாகவும் வலுவாகக் கட்டமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கரூர் - வேலுச்சாமிபுரத்தில் நேற்று (27.09) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது
இலங்கைத் தமிழரசுக் கட்சித் சிவஞானம் சிறீதரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் "எமது தொப்புள்கொடி உறவுகள்" எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலி
மேலும், அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சனத்திரட்சியில் சிக்குண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த மனவேதனைக்குரியது.
எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தால் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த எமது தொப்புள்கொடி உறவுகளான அப்பாவிப் பொதுமக்கள் 39 பேர் அநியாயமாக உயிரிழந்தமை எமக்கும், எமது மக்களுக்கும் மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது.
நெருக்கடியும், கனதியும் மிக்க இந்த துயர்மிகுந்த சூழலால் பாதிப்புற்றிருக்கும் எல்லாத்தரப்பினருடனும் உணர்வுரீதியாக நாமும் கரம்கோர்த்துக்கொள்கிறோம்.
இழப்பின் வலிகளையும் - ரணங்களையும் உணர்ந்தவர்களாக, ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலிகளும், அவர்களது குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக எமது பிரார்த்தனைகளும்.' என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
