புரட்சி தான் ஒரே வழி: சர்ச்சையான பதிவு - த.வெ.க ஆதவ் அர்ஜுனா மீது பாயும் வழக்குகள்
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் சிலர் தமிழக காவல்தறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் கருத்து
இந்நிலையில், த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைத்தளப் பதிவில் "வீதியில் நடந்து சென்றாலே தடியடி, சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது, இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாகக் காவல்துறை மாறிப் போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், Gen - Z தலைமுறையும் ஒன்றாக கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும் என அந்தப் பதிவில் கூறியிருந்தார்.
இதற்குப் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வந்த நிலையில் அவர் அந்த அப்பதிவை நீக்கினார்.
இந்த நிலையில் , ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்
சம்பவம் தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சி...எம்.சார்...பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.
ஆனால், கட்சி தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் நான் இருப்பேன்” எனவும் அவரது காணொளியில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
