கச்சத்தீவு விவகாரம்: இலங்கை அரசின் உறுதியான நிலைப்பாடு
கச்சத்தீவை இலங்கை (Sri Lanka) ஒரு போதும் விட்டுக்கொடுக்காது என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எங்கள் இராஜதந்திர வழிகள் திறந்தே உள்ளன ஆனால், இலங்கையின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க இலங்கை ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது என்பது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு பிரச்சினை
அத்தோடு, இது சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்ட கச்சத்தீவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜூன் 27 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) கருத்து தெரிவிக்கையில், இலங்கை மற்றும் இந்திய (India) கடற்றொழிலாளர்களை கைது செய்யும் பிரச்சினைக்கு காரணம் 1975 ஆம் ஆண்டு அவசரநிலை காலத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமே என்றும், அதன்படி சில குறிப்பிட்ட கடல் பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமைகளை இந்தியா கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அமைச்சர் விஜித ஹேரத் இதனை நிராகரித்து, கச்சத்தீவு பிரச்சினையில் முரண்பாடுகள் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இடையிலான உறவு
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதாக குற்றம் சாட்டிய அமைச்சர், அவர்கள் மீன்பிடி வளங்களை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல், கடல் தாவரங்களையும் சேதப்படுத்துகிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், இந்திய அரசாங்கம் இலங்கை கடல் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடித்தலை ஆதரிக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையினர் பாக் ஜலசந்தியில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், தீவு நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர் என அமைச்சர் சுட்டிக்காட்டிமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
