செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்கள் : நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
யாழ். (Jaffna) செம்மணியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்றைய தினம் (05.06.2025) மதுரை (Madurai) மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் (Sri Lanka) தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு முதல் இப்போது உள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரை எந்தவித கண்டன குரல் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டினர்.
மனித உரிமை ஆணையம்
தொடர்ந்து, இலங்கை அரசு மீது ஐ.நா மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இந்திய அரசு வழக்கம் போல கள்ள மௌனம் காக்காமல் பன்னாட்டு விசாரணை நடத்த குரல் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






